விவசாயமும் சுற்றுச் சூழலும் அவசியமான ஒன்று -சமூக சேவையில் அசத்தும் ஜெனட் பிரீத்தி!
கிராமங்களே ஒரு நாட்டின் முதுகெலும்பு. கிராமங்கள் முன்னேறினால் நாடே முன்னேறும். இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதே எங்களது மிக முக்கியமான குறிக்கோள், அதனோடு சமூகத்திற்கான பல்வேறு விதமான சேவைகளையும் மிகப்பெரிய பணிகளாக செய்து வருபவர் திருச்சியை சேர்ந்த ஜெனட் பிரீத்தி. குரலற்றவர்களின் குரலாக எங்கள் வாய்ஸ் அறக்கட்டளை 1985 முதல் செயல்பட்டு வருகிறது. எனது தந்தை கிரிகோரி அவர்கள் இயற்கை விவசாயி, நம்மாழ்வார் அவர்களோடு சேர்ந்து பணியாற்றியவர். தற்போது பல்வேறு விதமான சேவைகளையும் வழங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது எங்கள் அறக்கட்டளை.
சேவை செய்வதில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
எங்களது அறக்கட்டளை கடந்த 40 வருடங்களாக இயங்கி வந்தாலும் நான் பொறுப்பேற்றுக் கொண்டது 2013 ஆம் ஆண்டு தான். நான் கல்லூரி படிப்பை முடித்த போது எனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அறக்கட்டளை பொறுப்பினை ஏற்று நடத்தி வந்தேன். பின்னர் சேவைகள் மூலமாக கிடைக்கும் மனமகிழ்ச்சி மற்றும் ஆத்ம திருப்தியின் மூலமாக முழு ஈடுபாட்டுடன் அறக்கட்டளையினை நடத்தி வருகிறேன். அதில் இயற்கை விவசாயத்திற்கான பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நட்பு சிறார் இல்லம் நடத்தி வருகிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு உதவிகளையும், அவர்களின் வாழ்வாதார பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
அறக்கட்டளையின் பணிகள் குறித்து சொல்லுங்கள்?
கடந்த 26 வருடங்களாக தேசிய பசுமைப் படை ஒன்றை ஏற்படுத்தி பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் ஈக்கோ கிளப் ஏற்படுத்தி விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறோம். திருச்சி முசிறி மணப்பாறை பகுதிகளின் இன்சார்ஜ் எங்கள் குழு தான். அதே போன்று இதுவரை 7.50 லட்சம் மரக்கன்றுகளை பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டோடு சேர்த்து நட்டு பராமரிப்பு செய்து வருகிறோம். மரக்கன்றுகள் நடுவதோடு எங்களது பணிகள் முடிவடைவதில்லை. அந்த மரங்கள் வளரும் வரை ஜிபிஎஸ் மூலமாக கண்காணிப்பு செய்யும் பணிகளை நாங்கள் தான் மேற்கொண்டு வருகிறோம் ‘‘ நட்பு சிறார் இல்லம்’’ 40 குழந்தை களோடு 2006 இல் ஆரம்பித்தோம் . இந்த குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழலிலிருந்து வந்தவர்கள். இவர்களை நல்ல முறையில் வளர்த்து கொண்டு வருவது என்பது பெரும் சவாலான விஷயமாக இருந்தாலும் முழு முயற்சியுடன் திறம்பட நடத்தி வருகிறோம். இன்று பல குழந்தைகள் நல்ல முறையில் படித்து நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த ஒவியம், கவிதை என போட்டிகளை நடத்தி பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை எங்கள் அறக்கட்டளை செய்து வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து அவர்களுக்கான பல்வேறு பணிகளை செய்து தருகிறோம். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகளை தடுத்து நிறுத்தி வருகிறோம்.
வயநாடு இயற்கைப் பேரிடர் நேரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தோம். அதே போன்று கஜாபுயல் ஒக்கிபுயல் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் எங்களது அறக்கட்டளை மூலமாக தேவையான உதவிகளை செய்தோம். கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம புறங்களில் வெள்ள பாதிப்பின்போது பெரிதும் உதவி செய்தோம். சுனாமி பேரிடர் காலங்களுக்கு பிறகு 190 வீடுகளை அமைத்து கொடுத்தோம். அதே போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான பல சுய உதவி குழுக்கள் அமைத்து அவர்களுக்கான வாழ்வாதார த்திற்கு தேவையான பல்வேறு பணிகளை செய்கிறோம். இயற்கை விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது போன்றவை எங்களது அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் செய்ய போதுமான உதவிகளை செய்து வருகிறோம். மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம். இதுவரை 3200 விமன் அக்ரிபிரினர்ஸ் எங்களால் உருவாகி உள்ளனர். அதே போல் 222 கிராமங்களுக்கு தேவையான உதவிகளை செய்து உள்ளோம். தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி ஏற்படுத்தி சேவை செய்து வருகிறோம்.
எதிர்கால பணிகள் குறித்து ...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக முக்கியமான பணி என்பதால் மரக்கன்றுகள் நடுவதை அதிகரிக்க வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்துள்ளோம். பத்து இலட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்பதே எங்களது தற்போதைய எண்ணங்கள். அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை பாரஸ்ட் டிபார்ட்மென்ட் உடன் சேர்ந்து செய்து வருகிறோம். அதேபோல இயற்கை விவசாயத்திற்கு நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வை நிறைய ஏற்படுத்தும் பணிகளை திட்டமிட்டு வருகிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை சார்ந்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். இவற்றிற்கான பல்வேறு பணிகளை பெரும் முயற்சிகளோடு திட்டமிட்டு வருகிறோம். வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டிய பல்வேறு திட்டங்களை திறம்பட நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கைகள் இருக்கிறது. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. கிராமப்புற விவசாயிகள் மற்றும் கிராம மக்களை முன்னேற்றுவதும் நம் தலையாய கடமைகளில் ஒன்று தான். அதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சமூக சேவையில் உங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்புக் குறித்து கூறுங்கள்
எனது சேவைகள் மற்றும் செயல்பாடுகள் அத்தனைக்கும் எனது பெற்றோர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவரும் போதுமான ஊக்கமும் ஒத்துழைப்பினையும் தருகிறார்கள். எனது பணிகளுக்காக பல்வேறு பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெற்றது மகிழ்வான விஷயம். பெண்கள் தனது கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தினை பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். எல்லா பெண்களும் தமக்கென சுய பொருளாதார தன்னிறைவை அடைந்திருக்க வேண்டும். அதே போன்று தங்களது கம்பர்ட் ஜோனை விட்டு வெளியேறி துணிச்சலுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் சமூகப் பணிகளுக்கு வந்தால் பெரும் மாற்றத்தை அவர்களே உணர்ந்து கொள்வார்கள் என சமூக அக்கறையுடன் பேசுகிறார் ஜெனட் பிரீத்தி.
- தனுஜா ஜெயராமன்.