விவசாயிகள் குறித்து அவதூறு கங்கனா ரனாவத் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: கடந்த 2021-2022ம் ஆண்டு ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி-யுமான கங்கனா ரனாவத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா ராவத் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்,‘‘கங்கனா அளித்துள்ள விளக்கத்தை எல்லாம் வழக்கை ரத்து செய்ய கோரும் மனுவில் பரிசீலிக்க முடியாது. மாறாக வழக்கை விசாரணை நடத்தும் நீதிமன்றத்திடம் இதனை தெரிவியுங்கள். மேலும் இதனை போதிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், கங்கனா ராவத் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.