கொள்ளிடம் அருகே குன்னம் பெரிய வாய்க்காலை தூர்வாராததால் விவசாயிகள் அவதி
*உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே குன்னம் பாசன பெரிய வாய்க்காலை தூர்வாராததால் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலிலிருந்து ஏ பிரிவு வாய்க்காலாக குன்னம் பெரிய வாய்க்கால் பிரிந்து கொள்ளிடம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது.
இந்த வாய்க்கால் குன்னம் கிராமத்தில் மட்டும் 1500 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பாசன வசதி அளித்து வரும் முக்கிய வாய்க்காலாக இருந்து வருகிறது. இங்குள்ள நிலங்கள் இந்த வாய்க்காலை பெரிதும் நம்பி இருக்கின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக குன்னம் பெரிய வாய்க்கால் தூர்வராமல் விடப்பட்டதால் வாய்க்கால் முழுமையும், புதர் மண்டி தூர்ந்து உள்ளதால், பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் வரும் தண்ணீர் இந்த கிளை வாய்க்காலான குன்னம் பெரிய வாய்க்கால் மூலம் சென்று சேர முடியாமல் இருந்து வருகிறது.
இந்த வாய்க்காலை நம்பி குருவை சாகுபடி முற்றிலும் இருந்து வருவதால் தற்போது வளர்ந்துள்ள குருவை நெற்பயிர் பெரிதும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து குன்னம் பெரிய வாய்க்கால் பாசனதாரர் சங்க தலைவர் செல்வக்குமார் விவசாயிகள் சார்பில் கூறுகையில்;
குன்னம் பெரிய வாய்க்கால் குன்னம் கிராமத்தில் மட்டும் 1,500 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் உரிய நேரத்தில் வந்து சேர்ந்துள்ளது.
ஆனால் குன்னம் பெரிய வாய்க்காலை இரண்டு வருட காலமாக தூர் வாராமல் விடப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் வந்து சேர முடியாமல் இருந்து வருகிறது. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் குன்னம் பெரிய வாய்க்காலை தூர்வாரி அனைத்து நிலங்களுக்கும் எளிதில் தண்ணீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.