தா.பழூர் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி பணியை துவங்கிய விவசாயிகள்
தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளான புரந்தான், அருள்மொழி, முத்துவாஞ்சேரி, காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, கூத்தங்குடி, இடங்கண்ணி, குறிச்சி, கோடாலி கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொன்னாற்று பாசனம் மற்றும் மோட்டார் பாசனம் மூலம் சம்பா பருவ நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதன் மூலம் 6 ஆயிரம் ஹெக்டர் சம்பா நெல் நடவு பணி துவங்கி உள்ளனர்.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மேட்டூர் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஜூன் மாதத்திற்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றின் மூலம் தண்ணீர் பொன்னாற்றுக்கு வந்தடைந்தது.
மேலும் அவ்வபோது பொழியும் மழையின் காரணமாக விவசாயிகள் நெல் விதைப்பில் தாமதம் காட்டி வந்தனர். தற்பொழுது தட்பவெப்ப சூழ்நிலை உள்ள காரணத்தினாலும் மேலும் தாமதம் ஆன காரணத்தினாலும் சம்பா நெல் சாகுபடி விதை நெல் விதைப்பில் ஈடுபட்டனர். நாற்றங்கால் தயார் செய்து 1009 மற்றும் சன்னம் நெல் ரகத்தை தேர்வு செய்து நெல் நாற்றங்கால் தயார் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தொடர்ந்து கொள்ளிடத்தில் அதிகப்படியான நீர் வரத்து இருந்த காரணத்தினால் ஆங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொனனாற்று வாய்க்காலில் தலைப்பில் கொள்ளிடம் குருவாடியில் ஏற்பட்ட மணல் திட்டு காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் வராமல் இருந்தது. சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் வரத்துக்கான பாதைகள் சரி செய்யப்பட்டு தண்ணீர் வரப்பட்டது.
இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று விவசாயிகள் நினைத்து சாகுபடியை துவங்கி உள்ளனர். பொன்னாற்று வாய்க்கால் முறையாக தூர்வாராததால் ஆற்றின் உள்ள பகுதியில் பெரிய அளவிலான கோரைகள் முட்செடிகள் இருப்பதால் குறைவான தண்ணிர் வரும் நேரத்தில் தேக்கம் அடைந்து விவசாயத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஆகையால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தால் மட்டுமே சிறப்பான முறையில் விவசாயம் செய்ய முடியும். ஆகையால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.