பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்
கமுதி : கமுதி அருகே விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே பெருநாழி மற்றும் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட. ஏக்கர் பரப்பளவிலான மானாவாரி மிளகாய் பயிர்களை கடந்த ஆண்டு பயிரிட்டு சாகுபடி செய்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெருநாழி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பருவம் தவறிய பருவ மழையால் கஞ்சம்பட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளப் பெருக்கெடுத்து வெள்ளநீர் பயிர்களை சூழ்ந்தது. இதனால் பயிர்களை வெள்ள நீர் இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி மிகப் பெரிய நஷ்டம் அடைந்தனர்.
அப்போது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என 80 சதவீதம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிவாரணத் தொகையும், தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மானாவாரி மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண தொகை, காப்பீடு செய்த பயிர்களுக்கு வழங்கிட கோரி நேற்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருநாழி துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் வேளாண் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெருநாழி விளாத்திகுளம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.