மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் அருள்ஜோதி, வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கருமலை ஆறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோவி.
நடராஜன் பேசுகையில்; திட்டை, தில்லைவிடங்கன் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர்களை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகள் திண்று சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறினார்.
அதனை தொடர்ந்து விவசாயி ராஜேஷ் பேசுகையில்; எனது மனைவியின் குடும்ப அட்டையிலிருந்து அவரது பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க முயன்ற போது ஏற்கனவே இருமுறை பெயர் நீக்கம் செய்துள்ளதாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ஆதார் முடக்கத்தை விடுவிக்க கோரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் துறையில் மனு செய்த போது பெயர் நீக்கம் செய்து தருவதாக தெரிவித்தார்.
ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். தொடர்ந்து கோட்டாட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே விவசாய நிலங்களில் மேய்ந்த மாடுகளை தங்களது வாகனத்தில் ஏற்றி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.