விளாத்திகுளம் அருகே புதூரில் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
விளாத்திகுளம் : விவசாயிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதூர் பயிர் உற்பத்தியாளர் கம்பெனி முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் அருகே புதூரில் 2016 முதல் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி நிறுவனமானது விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் விதைகளை விற்பனை செய்வதோடு விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பணிகளையும் மேற்கொள்கிறது.
இந்த பயிர் உற்பத்தியாளர் கம்பெனியில் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய குழுக்களாக பதிவு செய்து, இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக எட்டையபுரம் கனரா வங்கியில் இருந்து ஒரு குழுவிற்கு ரூ. 10 லட்சம் வீதம் ஏராளமான குழுக்கள் விவசாயக்கடன் பெற்றுள்ளனர்.
தங்களது நிறுவனம் மூலம் மட்டுமே வங்கியில் செலுத்த வேண்டும் என்று கூறி ஒவ்வொரு மாதமும் விவசாயிகளிடம் வசூல் செய்து உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல் நிர்வாகத்தினர் சுமார் ரூ 1 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடன்களை முறையாக செலுத்தவில்லை எனக்கூறி விவசாயிகளுக்கு வங்கியின் சார்பில் நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதனால் விவசாயத்துக்கு தேவையான கடன்கள், நகை கடன், கல்விக்கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலையில் விவசாயிகள் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக கம்பெனி நிர்வாகத்திடம் விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக முறையிட்டோம் எந்த தெளிவான பதிலும் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து விவசாயப் பொதுமக்களிடமிருந்து புதூர் பயிர் கம்பெனி நிர்வாகத்தினர் பெற்ற பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் 13ம் தேதி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்குள் 2 குழுவிற்கான கடத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் மற்றொரு குழுவின் கடன் தொகை ஒரு வாரத்துக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று மாலை 3 மணி வரையில் சம்பந்தப்பட்ட வங்கியில் பணம் எதுவும் செலுத்தப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாய குழுவுடன் இணைந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதூர் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 6.30 மணியளவில் கம்பெனி நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் வரும் 21ம் தேதிக்குள் நான்கு விவசாய குழுக்களின் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் 21ம் தேதி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவில்லை என்றால் மறுநாள் (22ம் தேதி) தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்படும் எனக்கூறி அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.