பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தஞ்சை: பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இருந்து நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து 3 ரயில்களில் அரவை பணிக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. பிற மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பும் பணிகளை துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நெல் கொள்முதல் பணிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்யான தகவல்.
அரசின் நடவடிக்கையால் 50 நாள்களில் 10 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் கூறவில்லை. கூடுதல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. செப்.1 முதல் 50 நாள்களில் 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 200ஆக கொள்முதல் நிலையங்கள் 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும். விவசாயிகளுக்கு என்றும் உறுதுணையாக திராவிட மாடல் அரசு இருக்கும். மழையில் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்தியுள்ளார். பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார் என்றும் கூறினார்.