விவசாயி வங்கிக்கணக்கில் ரூ.1.05 கோடி திடீர் வரவு: வருமான வரித்துறை விசாரணை
தேனி: விவசாயி வங்கி கணக்கில் ரூ.1.05 கோடி வரவானது குறித்து தேனி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவருக்கு சொந்தமாக, கேரள மாநிலம், உடும்பன்சோலையில் 1.5 ஏக்கரில் ஏலத் தோட்டம் உள்ளது. இதில் விவசாயம் செய்து வருகிறார். இவரது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் திடீரென டெபாசிட் ஆனது.
இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு தேனி மாவட்ட வருமான வரித்துறை சார்பில் மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். தனது வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகை எப்படி வரவானது என தனக்கு தெரியவில்லை எனவும், இந்த தொகைக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக வருமானவரி துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.