சிறுமிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 20 ஆண்டு சிறை
நெல்லை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (59). விவசாயி. இவர் கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி மதியம், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்து, தனது மடியில் உட்கார வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அலறி அழுதுள்ளார். அந்த சத்தத்தைக் கேட்டு, சிறுமியின் தாயார், ஓடி வந்துள்ளார். இதையடுத்து செல்வகுமார், சிறுமியை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீசார் செல்வகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி சுரேஷ் குமார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை அரசுத் தரப்பில் வழங்கவும் உத்தரவிட்டார்.