20 ஏக்கரில் பிரமாண்ட பண்ணை! :தரிசுக்காடு விளையுது பாரு...
புதுக்கோட்டையில் பழனியப்பா மெஸ் என்றால் வெகு பிரபலம். இந்த பிரபலத்திற்கு பாரம்பரியமான ஊரில் பாரம்பரியமான அசைவ உணவுகளைப் பரிமாறும் பாரம்பரிய உணவகம் என்பதுதான் பிரதான காரணம். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சுமார் 20 ஏக்கர் வயலில் ரசாயன கலப்பில்லாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு உணவு சமைப்பது தான் அந்த காரணம். 20 ஏக்கரில் உணகவத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதும், அந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதும் என தனக்குப் பிடித்த தொழிலை தனக்கு பிடித்த விவசாயத்தோடு சேர்ந்து செய்து வருகிறார் கண்ணன்.
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ராயப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள கண்ணனின் வயலுக்கு ஒரு காலைப் பொழுதில் சென்றிருந்தோம். 15 ஏக்கரில் பிரம்மாண்டமான நெல் வயலும் 5 ஏக்கரில் ஆயிரக்கணக்கான மரங்களும் என எந்தப்பக்கம் திரும்பினாலும் விவசாயம் நடந்தபடி இருக்கிறது. மீன்குட்டை, பன்றி வளர்ப்பு, மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையமாக மிளிரும் இந்தத் தோட்டம் ஒரு உணவுக்கூடாரம். தோட்ட வேலைகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த கண்ணனிடம் இந்த பண்ணையம் உருவானக் கதையைக் கேட்டோம். அவரும் ஆர்வத்தோடு பேச்சைத் தொடர்ந்தார். தாத்தா காலத்தில் இருந்தே விவசாயம்தான் எங்களுக்குத் தொழிலாக இருந்தாலும் அப்பா, அவர் காலத்தில் ஒரு உணவகத்தை தொடங்கி அதையே தொழிலாக செய்து வந்தார். நான் சிறுவனாக இருந்தபோதே அப்பாவோடு உணவகத்திற்கு வேலைக்கு வந்துவிடுவேன். பின், ஐடிஐ படித்துவிட்டு சிங்கப்பூரில் சில வருடம் வேலை.
ஊர் திரும்பிய பின், எனக்கு திருமணம் ஆனது. அதன்பிறகு மீண்டும் சிங்கப்பூர் செல்லவில்லை. இங்கிருக்கும் தொழிலையே பார்க்கலாம் என நினைத்து அப்பாவின் உணவகத்தை நான் நடத்தி வந்தேன். இதற்கிடையில், அப்பா எங்களது கிராமத்திலேயே 20 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். முந்திரி மரங்களும், முள் மரங்களும் நிறைந்த அந்த இடம் முழுக்க கடுமையான பாறைமண் நிறைந்திருந்தது. எந்த விவசாயத்திற்கும் ஏற்ற மண்ணாக இல்லாமல் இருந்தது. அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை வந்தது. நமது உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்கலாம் என எண்ணினேன். அதே சமயம், நமக்குத் தேவையான சமையல் பொருட்களை நாமே உற்பத்திச் செய்யலாம் எனவும் நினைத்தேன். அதனால், அப்பா வாங்கிய அந்த இருபது ஏக்கரையும் விவசாய நிலமாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை செய்யத் தொடங்கினேன்.
முதலில், 20 ஏக்கரில் உள்ள முந்திரி மரங்கள் உட்பட அனைத்து மரங்களையும் வெட்டினேன். அதன்பின், நிலத்திற்கு சென்று வரத் தோதான பாதையை உருவாக்கினேன். பின், பாறை மண்ணை வெளியிலெடுத்து அதில் குளக்கரை வண்டல் மண்ணைக் கொண்டு நிரப்பினேன். அந்த சமயம், எங்கள் பகுதியில் உள்ள பல குளங்கள் நகராட்சி சார்பில் தூர் வாரப்பட்டது. அப்படிதூர் வாரியதால் நிறைய மண் கிடைத்தது. அந்த மண்ணை டிப்பர் லாரிகள் மூலம் கொண்டுவந்து எனது நிலத்தின் மண்ணையே மாற்றினேன்.இப்படி, காடும் கரம்பையுமாக இருந்த மண்ணை விவசாயத்திற்கு உகந்த மண்ணாக மாற்றினேன். பின், முதன்முதலாக அந்த நிலத்தில் சம்பங்கியும் ரோஸும் விளைவித்து விற்பனை செய்து வந்தேன். அதைத்தொடர்ந்து, எனது நிலத்தில் அனைத்து வகையான விவசாயமும் நடக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படி, நெல் சாகுபடியை தொடங்கினேன். தற்போது என் நிலத்தில் 15 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தபடி இருக்கிறது. பல வகையான ரகங்களில் முப்போகமும் சாகுபடி நடந்தபடி இருக்கிறது. அந்த வகையில், வருடத்திற்கு 350 மூட்டை நெற்பயிர்களை சாகுபடி செய்கிறேன். இந்த நெல்மணிகளை அரிசியாக மாற்றி எனது உணவகத்திற்கே பயன்படுத்துகிறேன்.
அதேபோல, ஐந்து ஏக்கரில் பல வகையான மரங்கள் வளர்த்து வருகிறேன். ஆயிரம் தேக்கு, 230 மாமரங்கள், 250 தென்னை மரங்கள் என அனைத்தும் வளர்த்து வருகிறேன். கூடவே, பலாமரங்களும் வைத்திருக்கிறேன். இதுபோக, எலுமிச்சை, கறிவேப்பிலை, பிரியாணி இலை என என் உணவகத்திற்கு தேவையான விளை பொருட்களை நானே உற்பத்தி செய்து வருகிறேன். உணவகத்தில் வீணாகிற உணவுப்பொருட்களை வீசுவதற்கு பதிலாக அவற்றை பன்றிகளுக்கு கொடுக்கலாம் என எனது அப்பா பன்றி வளர்ப்பை தொடங்கலாம் என ஆசைப்பட்டார். ஆனால், அது நான் வந்தபிறகு தான் தொடங்கப்பட்டது. வயலும், பழ மரங்களும் போக மீதமுள்ள இடத்தில் பன்றி வளர்ப்பிற்கான கூடாரம் ஒன்றை உருவாக்கி அதில், 4 ஆண் பன்றிக்குட்டிகளையும் 16 பெண் பன்றிக்குட்டிகளையும் வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். அந்தப் பன்றிகளுக்கு எனது உணவகத்தில் மீதமாகிற உணவுகளேதான் தீவனம். அதன்படி, தற்போது 35 தாய் பன்றிகளும் 8 ஆண் பன்றிகளும் 120 பன்றிக்குட்டிகளும் எனது பண்ணையில் இருக்கின்றன.
இங்கு வளரும் பன்றிகளை நான் இறைச்சிக்காக நேரடியாக விற்பனை செய்வது கிடையாது. மாறாக, இறைச்சிக்காக பன்றிகளை வளர்ப்பவர்களிடம் எனது பன்றிக்குட்டிகளை கொடுக்கிறேன். அதுவும், 16 முதல் 18கிலோ எடை உள்ள பன்றிகளை மட்டுமே விற்பனை செய்கிறேன். இந்த வகையில், மாதம் சுமார் 50 பன்றிக்குட்டிகள் வரை விற்பனை செய்கிறேன். ஒரு குட்டி ரூ.6300க்கு விற்பனை செய்வதன் மூலம், மாதம் பன்றி வளர்ப்பில் இருந்து மட்டும் 3லட்சம் வருமானம் கிடைக்கிறது. பன்றி வளர்ப்பிற்கு தேவையான தீவனத்தை எங்கள் உணவகத்தில் இருந்தே கொடுப்பதால், பன்றி வளர்ப்பிற்கு தேவையான செலவும் எனக்கு குறைவுதான்.
அதேபோல, 30 சென்ட் நிலத்தில் மீன் குட்டை அமைத்து அதில், 4000 மீன்குஞ்சுகளை வளர்த்து வருகிறேன். கட்லா, லோகு, கெண்டை என வேறுவேறு ரக மீன்குஞ்சுகளை வளர்த்து வருகிறேன். இந்த மீன்களுக்கு தீவனமாக பன்றிக் கழிவுகளையே கொடுத்து வருகிறேன். அதேபோல, மீதமுள்ள பன்றிக்கழிவுகளை நெல் சாகுபடிக்கு உரமாகவும் கொடுத்து வருகிறேன். இப்படி, பண்ணை சார் தொழிலில் இருந்து அனைத்து வகையான விவசாயமும் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனது நிலத்தில் விளையும் அனைத்து உற்பத்திப் பொருட்களுமே இயற்கை முறையில்தான் விளைவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேன் வளர்ப்பும் தொடங்க வேண்டும் என அடுத்தக்கட்ட வேலையில் இருக்கிறேன். என்னை பொருத்தவரை விவசாயிகள் அனைவருமே ஒருங்கிணைந்த பண்ணையம் தொடங்க வேண்டும். அப்போதுதான், வேறுவேறு விவசாயத்தில் இருந்தும் வருமானம் பார்க்கலாம். தொடர் லாபமும் பெறலாம் என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் கண்ணன்.
தொடர்புக்கு:
கண்ணன்: 9942933912.
5 ஏக்கரில் உள்ள பல வகையான மரங்களுக்கும் நீர் பாசனம் செய்வதற்கு மாடர்ன் வாட்டர் சிஸ்டத்தை தொடங்கியிருக்கிறார் கண்ணன். அதாவது, அண்டர்கிரவுண்ட் முறையில் பாசனப் பைப்புகளை அமைத்து, ஒரு இடத்தில் நீர் திறந்துவிட்டால் ஒரே நேரத்தில் 50 மரங்களுக்கு நீர் பாயும் முறையை அவரது பண்ணையத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.