தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது: லாரி உரிமையாளர் சங்கங்கள், பொதுமக்கள் கடும் கண்டனம்
சென்னை: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலாகியுள்ளது. நாடு முழுவதும் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 6,606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 82 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. இதில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில் கடந்த ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் ரூ.25 வரை சுங்கக்கட்டண உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. இதன்படி நடப்பு நிதியாண்டில் 5-10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. அதன்படி ஏற்கனவே 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்பட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர கட்டணத்தில் ரூ. 70 உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.15ம், இரு முறை பயணிக்க ரூ.20ம் மாதாந்திர கட்டணத்தில் ரூ.395ம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளிலும் விரைவில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்கிற விவரங்கள் தெரியவில்லை. சுங்கக் கட்டண உயர்வால் தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். இதனால் தான் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுகையில், ‘‘இப்படி ஆண்டு தோறும் சுங்கக்கட்டண உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசியமான பொருட்களில் விலை உயரக்கூடும்’’ என்று கூறினர்.