வியாசர்பாடி முல்லை நகர் மயானத்தில் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெரம்பூர்: வடசென்னையை கலக்கியவர் வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன் (55). இவர் மீது பல்வேறு கொலை, ஆள்கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கல்லீரல் பிரச்சனை மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை இறந்தார். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து, மாஜிஸ்திரேட் விசாரணையும் முடிந்து, நேற்று முன்தினம் மாலை இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் நாகேந்திரனின் உடல் நேற்று முன்தினம் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு, நேற்று காலை நாகேந்திரனின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, நாகேந்திரனின் உடல் நேற்று காலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்று மதியம் 2.30 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வியாசர்பாடி முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நாகேந்திரன் முக்கிய குற்றவாளி என்பதால், எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதால், சென்னை கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், நாகேந்திரன் உயிரிழந்த வியாழக்கிழமை முதல் நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்களும் போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வடக்கு மண்டல இணை ஆணையர் மனோகர், தெற்கு மண்டல இணை ஆணையர் கல்யாண், புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மற்றும் வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை நாகேந்திரன் வீடு அமைந்துள்ள இடம், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வசிக்கும் வீடு, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் அலுவலகம் இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி நாகேந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.