புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்!
சென்னை: புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மறைவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; இந்தி திரையுலகின் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. பல தலைமுறைகளின் இதயங்களில் இடம்பிடித்த அவருடைய அற்புதமான நடிப்பு, பணிவு, மற்றும் எளிமையான மனிதநேயம் என்றும் மறக்க முடியாதவை.
2012 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்ற இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் கோலோச்சிய அற்புதமான கலைஞர். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்தியத் திரைவானம் இன்று ஒரு விலைமதிப்பற்ற நட்சத்திரத்தை இழந்துள்ளது. சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.