பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பிளேடு தயாரித்து விற்பனை
தண்டையார்பேட்டை: டெல்லியில் ‘’கும்பி ஸ்பீடு’’ பிளேடு என்ற மரம் அறுக்கும் பிளேடு தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சசிகுமார் (33) என்பவர் சென்னை அயனாவரத்தில் உள்ள அறிவு சார் சொத்துரிமை அமலாக்கக் குழு போலீசில் கொடுத்துள்ள புகாரில், ‘’எங்களது நிறுவனத்தின் பெயரில் போலியாக கும்மி ஸ்பீடு பிளேடு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அந்த கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து சவுகார்பேட்டை ஆதியப்பா நாயக்கன் தெரு, சோமசுந்தரம் தெரு பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது போலியாக பிரபல நிறுவனத்தின் பெயரில் பிளேடு தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது.இதையடுத்து அங்குள்ள 2 கடைகளில் இருந்து போலி பிளேடுகளை பறிமுதல் செய்து உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.