தமிழ்ச்சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்ட தேவர் திருமகனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்! துணை முதல்வர்!
சென்னை: தமது அரசியல் பணியாலும் - சமூகப் பணியாலும் தமிழ்ச்சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்ட தேவர் திருமகனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் குருபூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது. விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளது.
இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கமுதியில் இருந்து பசும்பொன் கிராமம் வரையிலும் 4300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஒரு டி.ஐ.ஜி., 20 சூப்பிரண்டுகள், 27 கூடுதல் சூப்பிரண்டுகள் உள்பட மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜையையொட்டி உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் - அந்நிய ஆதிக்கத்தை விரட்ட நேதாஜி திரட்டியப் படைக்கு எண்ணற்ற வீரர்களை அனுப்பிய தீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று. குற்றப்பரம்பரை சட்டத்தினால் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மக்களை தமது போராட்டங்கள் மூலம், அக்கொடிய சட்டத்தின் கோரப் பிடியில் இருந்து விடுவித்த வரலாற்று பெருமைக்குரியவர். தமது அரசியல் பணியாலும் - சமூகப் பணியாலும் தமிழ்ச்சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்ட தேவர் திருமகனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.