தள்ளாடும் எதிர்க்கட்சிகள்
2021ம் ஆண்டு மே 7ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் எளிய விழாவில் முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக்கூறி பதவியேற்றார். பதவியேற்ற அன்றே கட்டணமில்லா பேருந்து பயணம் உள்பட நான்கு நலத்திட்டங்களை உடனே செயல்படுத்தினார். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் பிற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. கல்வி, மருத்துவ துறைகளில் அளப்பரிய சாதனைகளாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் வழியில் மக்கள் போற்றும் மகத்தான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் மு.க.ஸ்டாலின். கடந்த நான்கு ஆண்டுகளையும் தாண்டி நாள்தோறும் நலத்திட்டங்கள் என்பதோடு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக அரசின் சாதனைகள் என்பது அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பெற்ற சாதனையாகவே இருக்கிறது. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மக்களின் மனம் கவர்ந்த அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர்கள் பதவிகள், மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க உங்களுடன் ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம், தாயுமானவர் திட்டம், மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி என மக்களுக்கான அரசாக விளங்கி வருகிறது.
கல்வி, விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தேசிய அளவில் சாதனை படைத்து ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பள்ளிகளில் காலை உணவு, நான் முதல்வன் திட்டம், மாணவர்களுக்கு உயர்கல்வி, கலைஞர் வீடு கட்டும் திட்டம் பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களை பின்பற்றியே பிரிட்டனில் தொழிலாளர் கட்சி வாக்குறுதிகளை அளித்து வெற்றியும் பெற்றிருக்கிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறிய சம்பவங்களை தவிர்த்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கூட்டணி கட்சிகளின் மக்கள் நல கோரிக்கைகளையும் திமுக அரசு உடனுக்கு உடன் நிறைவேற்றி வருகிறது. ஒரு பக்கம் திமுக முன்னணி தலைவர்கள் வீடுகளில் ரெய்டு, மறுபக்கம் 100 நாள் வேலை திட்டம், கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, மக்கள் நலப்பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். திமுக கூட்டணியிலும், ஆட்சியிலும் பிணக்கு ஏற்படாதா என கனவில் எதிர்க்கட்சிகள் உள்ளன. இதை சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முதல்வரை ஒருமையிலும் ேபசி வருகிறார்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் மீது கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அதிமுக-பாஜ கூட்டணியே இணக்கமாக இல்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் எந்த அணியில் உள்ளார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. பாமகவில் ராமதாஸ், அன்புமணிக்கு இடையே மோதல் 7 மாதங்களையும் தாண்டி உச்சத்தில் உள்ளது. அதிமுக பலவீனமாக உள்ளது. அதனை இனிவரும் காலங்களில் மீட்டெடுப்பேன் என சசிகலா பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் மல்லுகட்டினாலும், திமுக தலைமையிலான கூட்டணி சத்தமில்லாமல் மக்கள் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசு, கடுமையான நிதி நெருக்கடி கொடுத்தாலும், எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தையும் தாண்டி திமுக தலைமையிலான அரசு வீறு நடைபோட்டு வருவதால் எதிர்க்கட்சிகள் முகாம் தள்ளாடுகிறது.
