பொய் வழக்கு போட்டு வாலிபரை தாக்கிய எஸ்ஐ உட்பட 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
நெல்லை: திருமணம் முடிந்து 5வது நாளில், நிபந்தனை ஜாமீனுக்காக காவல் நிலையம் சென்ற இளைஞர் மீது பொய் வழக்குபதிவு செய்து, தாக்கியதாக எஸ்ஐ உட்பட 2 போலீசாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, டோனாவூரைச் சேர்ந்த திரவியராஜ் மகன் டி.ஜோசப் செல்வகுமார். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த 2018-ல் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், வீட்டுக்கு வர்ணம் பூசும் பணி நடந்துள்ளது.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம்தேதி, திருமண வேலை காரணமாக ஜோசப் செல்வகுமார் வெளியே சென்றிருந்தபோது, வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த நெல்சன் என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெபாதாய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், நெல்சன், ஜெபாதாய் மீது பெயின்டை ஊற்றியுள்ளார். இது தொடர்பான புகாரில் ஜோசப் செல்வகுமாரின் பெயரையும் சேர்த்து ஏர்வாடி காவல் நிலையத்தில் ஜெபாதாய் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில், ஏர்வாடி போலீசார் ஜோசப் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், ஜோசப் செல்வகுமார் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். தொடர்ந்து அதே ஆண்டு, அதே மாதத்தில் 20ம்தேதி அவருக்குத் திருமணம் நடந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்து, நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடுவதற்காக 2018 ஆகஸ்ட் 24ம்தேதி ஏர்வாடி காவல் நிலையத்துக்குச் சென்றார்.அப்போது, அங்கு பணியில் இருந்த காவலர் முத்துக்குமார், ‘விசாரணைக்கு வராமல் எப்படி முன்ஜாமீன் வாங்கலாம்?’ என்று மிரட்டி, ஜோசப்செல்வகுமாரின் கன்னத்தில் அறைந்ததாகவும், மறுநாள், ஆகஸ்ட் 25ம் தேதி (திருமணம் முடிந்த 5-வது நாள்) மீண்டும் கையெழுத்திடச் சென்றபோது, அப்போதைய எஸ்ஐ இமானுவேல், ‘உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கும் அளவுக்கு தைரியமா?’ என்று கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை ஜோசப் செல்வகுமார் தனது செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது, செல்போனைப் பறித்த எஸ்ஐ இமானுவேல், காவலர் முத்துக்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து லத்தியால் தாக்கி, காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.மேலும், முதல் வழக்கில் புகார் கொடுத்த ஜெபாதாயின் மருமகள் அன்பரசி என்பவரிடம், ஜோசப் செல்வகுமார் தவறாக நடக்க முயன்றதாக புகார் பெற்று மற்றொரு வழக்கு பதிவு செய்து, ஜோசப் செல்வகுமாரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, எஸ்ஐ இமானுவேல், காவலர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஜோசப் செல்வகுமார் புகார் அளித்தார் . இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், காவல்துறை தரப்பில் பல குளறுபடிகள் இருப்பதைக் கண்டறிந்தார்.இரண்டாவது வழக்கில் புகார் அளித்த அன்பரசி, சம்பவம் நடந்தது 2018 ஆகஸ்ட் 28ம் தேதி என்று சாட்சியம் அளித்தார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் 25 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முரண்பாடு போலீசாருக்கு எதிரானதாக அமைந்தது.
இரண்டாவது வழக்கின் நீதிமன்றக் காவல் அறிக்கையில், புகார்தாரரின் பெயர் ‘அன்பரசி’ என்பதற்குப் பதிலாக ‘கலையரசி’ என்று தவறாகத் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தவறை சரி செய்ய போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை ஆணையம் ‘வழக்கிற்கு ஏற்பட்ட மரண அடி’ என்று குறிப்பிட்டது. ஜோசப் செல்வகுமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறியபோது, நிலையத்தில் சிசிடிவி கேமரா வசதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையும் ஆணையம் நிராகரித்தது.
முன்ஜாமீன் பெற்ற ஆத்திரத்தில், திட்டமிட்டு ஜோசப் செல்வகுமார் மீது பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது ஆணைய விசாரணையில் உறுதியானது. தொடர்ந்து விசாரணையின் முடிவில், போலீசார் 2 பேரும் மனித உரிமைகளை மீறியுள்ளது நிரூபிக்கப்பட்டதாக கருதிய ஆணையம், பாதிக்கப்பட்ட ஜோசப் செல்வகுமாருக்கு, தமிழ்நாடு அரசு ஒரு மாத காலத்திற்குள் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை தலா ரூ.50 ஆயிரம் வீதம் எஸ்ஐ இமானுவேல், காவலர் முத்துகுமார் ஆகியோரிடமிருந்து அரசு வசூலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட 2 போலீசார் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.