புதிய குடியேற்றம், வெளிநாட்டினர் சட்டம் அமல்; போலி பாஸ்போர்ட், விசா வைத்திருந்தால் 7 ஆண்டு சிறை: ரூ.10 லட்சம் வரை அபராதம்
புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாபதியின் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதேஷ் குமார் வியாஸ் வெளியிட்ட அறிக்கையில்,\\” புதிய சட்டத்தின்படி இனிமேல் போலி பாஸ்போர்ட் அல்லது விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது அல்லது நாட்டிற்குள் தங்குவது அல்லது வெளியேறுவதற்கோ பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத , ஆனால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஆனால் ரூ.10லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். விடுதிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் வெளிநாட்டினரை குறித்த தகவல்களை கட்டாயமாக தெரிவிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கின்றது.
செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணம் இல்லாமல் இந்தியாவின் எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழையும் எந்தவொரு வெளிநாட்டை சேர்ந்தவரும் சட்டத்தின் விதிகள் அல்லது அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட எந்தவொரு விதி அல்லது உத்தரவையும் மீறி நுழைபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வெளிநாட்டவர் அடிக்கடி செல்லும் இடங்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தவும், வளாகத்தை மூடுவதற்கும் அல்லது அனுமதி மறுப்பதற்கும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.