கூட்டுறவு சங்கத்தில் ரூ.40 லட்சம் போலி நகை
அருமனை சந்திப்பில் உள்ள ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தங்க நகை கடன் கொடுப்பது வழக்கம். இந்த சங்கத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நகை பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த தணிக்கையின் போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் போலியான நகைகள் அனைத்தும் நகை பரிசோதகரின் உதவியால் வைக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பெரும்பாலும் அவரது தாய், தந்தை உறவினர்கள் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து உடனே அருமனை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஐ சுசின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுமார் 17 நகை கணக்குகள் வைக்கப்பட்டு இருப்பதும், 12 கணக்குகளில் இருக்கும் நகைகள் முற்றிலும் போலி என்பதும் தெரியவந்தது. அவை சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புடையது என்றும் சராசரியாக 40 பவுன் நகைகள் போலியாக 2 வருடமாக வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.