பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனைக்கு சீல்
ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராம், அணைக்கட்டுசேரி பகுதியில் வசிக்கும் ஞானம்மாள் (47) என்ற பெண், தனது வீட்டின் முன்பு தனியாக அலோபதி கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவரது கிளினிக்குக்கு நேற்று பட்டாபிராம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (43) என்பவர், தனது தோள்பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு ஞானம்மாள் வலிதடுப்பு ஊசியை போட்டுள்ளார். பின்னர் வெங்கடேஷ் வீடு திரும்பும்போது திடீரென வியர்த்து கொட்டி, படபடப்பு ஏற்பட்டதில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேஷுக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியான வெங்கடேஷ் குடும்பத்தினர், இதுபற்றி கிளினிக் நடத்திய ஞானம்மாளிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் மழுப்பலான பதிலை கூறி, அலட்சியமாக பேசியுள்ளார். இதுகுறித்து பட்டாபிராம் போலீசில் வெங்கடேஷ் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து, ஞானம்மாளிடம் விசாரித்தனர். பின்னர் இதுபற்றி மருத்துவ கவுன்சிலுக்கும் தகவல் தெரிவித்தனர் இப்புகாரின்பேரில் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் அம்பிகா நேரில் வந்து பார்வையிட்டு, ஞானம்மாளின் போலி அலோபதி கிளினிக்கில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஞானம்மாள் பிசியோதெரபி படித்துவிட்டு, கிளினிக் வைத்து அலோபதி மருத்துவம் பார்த்து வந்திருப்பது இணை இயக்குநருக்குத் தெரியவந்தது. இதனால் அந்த கிளினிக்கை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதுதொடர்பான மேல்நடவடிக்கைக்கு பட்டாபிராம் போலீசாருக்கு மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் பரிந்துரைத்தார். இதுகுறித்து ஞானம்மாளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.