வீட்டில் கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது
ஓசூர்: ஓசூரில் மருத்துவம் படிக்காமல், வீட்டிலேயே கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் ஜெபின் பானு(55). இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-கலெக்டர் ஆக்ருதி ெஷட்டி உத்தரவின்பேரில், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் லட்சுமி மற்றும் ஓசூர் சரக மருந்துகள் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, ஜெபின் பானு முறையாக மருத்துவம் மற்றும் நர்சிங் படிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சித்த மருத்துவத்திற்கு படித்ததாக கூறி, சில போலி சான்றிதழ்கள் வைத்திருந்தார். அதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த சில ஆங்கில மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஜெபின் பானுவை அட்கோ போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மருத்துவம் பார்த்து வந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.