பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு போலி சிஎஸ்ஆர் வழங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: பரபரப்பு தகவல்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம், புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றியவர் லட்சுமி. இவர் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் தொலைந்துபோன பத்திரங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் தொலைந்ததாக பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று போலியான சிஎஸ்ஆர் போட்டதாக புகார் எழுந்தது. சென்னை, திருப்பூர், கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து சிலர் இங்கு வந்து தங்களது நில பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஜெயக்குமாருக்கு தெரியவரவே அவர் ரகசிய விசாரணை நடத்தினார். அப்போது இத்தகவல் உறுதியானது.
இதையடுத்து அவரை கடலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில் மீண்டும் விசாரணை தீவிரமானது. சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மற்றும் எஸ்பியால் நியமிக்கப்பட்ட ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் புவனகிரி காவல் நிலையம் வந்தும், வேறு பல வகையிலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் லட்சுமி வழங்கிய சிஎஸ்ஆர் ஆவணங்களை சோதனை செய்து, அதுகுறித்து விசாரித்தபோது அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதை போலீசார் கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு அறிக்கையாக அனுப்பினர். அதன் அடிப்படையில் அவர் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை டிஐஜிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமியை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.