போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்!!
சென்னை: போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், போக்குவரத்து விதிமீறல் இ-சலான் மோசடி வாட்ஸ் ஆப்-பில் பரவி வருகிறது. வாட்ஸ் ஆப் தகவலில், mParivahan செயலி எனக் கூறப்படும் ஒரு APK கோப்பிற்கான லிங்க் வருகிறது. லிங்க் மூலம் செயலி நிறுவப்பட்டவுடன் வங்கி தொடர்பான தகவல்கள் திருடப்பட்டு பரிவர்த்தனை மோசடி நடைபெறுகிறது.
போக்குவரத்து, அரசு தொடர்பான தகவல்கள் வாட்ஸ் ஆப் முலம் அனுப்பப்படாது. அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே அபராதம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க வேண்டும்.மேலும் தெரியாத எண்களில் இருந்து வரும் APK கோப்பு, பிற அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். OTP உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் மொபைல் செக்யூரிட்டி அப்டேட் செய்யப்படுகிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இணைய மோசடியால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர்கிரைமில் புகார் அளிக்க வேண்டும்."இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.