சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள்... குடிமக்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!
டெல்லி : சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து குடிமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், "போலியான முதலீட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் ஆன்லைன் சதித்திட்டங்களுக்கு போலி விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில், பயனர்களைத் தவறாக வழிநடத்த டீப்ஃபேக் வீடியோக்களும் உபயோகிக்கப்படுகின்றன. இந்த மோசடிகளால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ளனர். கண்ணைக் கவரும் காட்சிகள், தவறான வாக்குறுதிகள் மற்றும் தொழில்முறைத் தோற்றமுடைய ஆன்லைன் பக்கங்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே சமூக ஊடகங்களில் பரவும் தேவையற்ற முதலீட்டுத் திட்டங்கள், கேஷ்பேக் சலுகைகள் அல்லது பகுதிநேர வேலை செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடும் உடனடியாக தேசிய சைபர் கிரைம் புகாரளிப்பு போர்டல் (www.cybercrime.gov.in) மூலம் அல்லது 1930 ஹெல்ப்லைன் மூலம் புகாரளிக்கப்பட வேண்டும். இந்த ஹெல்ப்லைன் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமான தொகையை மீட்டெடுக்க உதவியுள்ளது. மேலும், எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க, CYBERDOST என்ற அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கை அனைத்து முன்னணி சமூக ஊடக தளங்களிலும் பின் தொடர வேண்டும், "இவ்வாறு உள்துறை அமைச்சகம் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.