போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து சொத்துக்களை அபகரித்து வங்கிகளில் சுமார் ரூ.8.3 கோடி பணம் பெற்று மோசடி செய்தவர் கைது
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து சொத்துக்களை அபகரித்து வங்கிகளில் சுமார் ரூ.8.3 கோடி பணம் பெற்று மோசடி செய்த 2 வழக்குகளில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1 லேப்டாப் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்து மத்தியகுற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த், வ/59, என்பவர், தனது தாயார் ருக்குமணி என்பவருக்கு சொந்தமாக 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கொண்ட கட்டிடத்துடன் கூடிய இடம் உள்ளதாகவும், 2019ம் ஆண்டு ருக்குமணி இறந்துவிட்ட நிலையில், சிலர் கூட்டாக சேர்ந்து தனது தாயார் ருக்குமணி போல ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோருக்கு கிரையம் செய்து கொடுத்து, பின்னர் எதிரிகள் மேற்படி சொத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து, ரூ.3.03 கோடி பணத்தை கடனாக பெற்று கடனை செலுத்தாததால், வங்கியிலிருந்து மேற்படி இடத்தில் கடன் நிலுவை நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகவும், தனது தாயார் பெயரிலுள்ள இடத்தை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாராசந்த், 13.02.2024 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவில்( LFIW), வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 5 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் மேற்படி வழக்கில் தலைமறைவாக இருந்த கமலகண்ணன் என்பவர் உட்பட தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
மேலும் மத்திய குற்றப்பிரிவு மற்றொரு epyமோசடி வழக்கில் ரமேஷ் உல்லா மற்றும் பாரதிஉல்லா ஆகியோருக்கு சொந்தமாக Seashore town modern lay out, சோழிங்கநல்லூர் என்ற இடத்திலுள்ள சுமார் 12,000 சதுரடி இடத்தை எதிரிகள் கமலகண்ணன் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து ஷியாஸ் புதுவிட்டில் என்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கும், அவரது மனைவிக்கும் விற்பது போன்று போலியான விற்பனை பத்திரத்தை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது போல உருவாக்கி, அதனடிப்படையில், எழும்பூரிலுள்ள SBI வங்கியில் அடமானமாக வைத்து இருவர் பெயரிலும் மொத்தம் ரூ.5 கோடி கடன் தொகையாக பெற்றும், மேற்படி கடன் தொகையை எதிரிகள் பிரித்து கொண்டு ஷியாஸ் புதுவிட்டில் என்ற மனுதாரரையும், வங்கியையும் ஏமாற்றியது தொடர்பாக ஷியாஸ்புதுவிட்டில் என்பவர் கொடுத்த புகார் மீது, மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கிலும், தலைறைவு எதிரி கமலகண்ணன், என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
மேற்படி வழக்குகளில் தொடர்புடைய தலைமைறைவு எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப அவர்களின் வழி காட்டுதலின் படி, நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி 2 வழக்குகளிலும் தொடர்புடைய முக்கிய எதிரி கமலகண்ணன், வ/45, கொடுங்கையூர், சென்னை என்பவரை தக்க புலன் வைத்து பெங்களூரில் வைத்து நேற்று 18.11.2025 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 1 லேப்டாப் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி கமலகண்ணன் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் 13 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி கமலகண்ணன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (19.11.2025) நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.