மேல்மலையனூர் சுற்றியுள்ள கிராமங்களில் போலி எலும்பு முறிவு மருத்துவர்கள் அதிகரிப்பு
*விழுப்புரம் ஆட்சியரிடம் புகார் மனு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் போலி எலும்பு முறிவு மருத்துவர்கள் அதிகரித்துள்ளதால் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சித்தேரியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சித்தேரி கிராமத்தில் எலும்பு முறிவு மருத்துவர்கள் என்று சித்தேரி, கெங்கபுரம், தேவனூர், வளத்தி போன்ற பல இடங்களில் பெயர் பலகை வைத்து போலியான மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். போலியாக எலும்பு முறிவு வைத்தியம் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டபோது சுகாதாரத்துறை இந்த பகுதியில் பதிவு பெற்ற மருத்துவர்கள் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது போலியான மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலியாக எலும்பு முறிவு வைத்தியம் பார்த்து சட்டவிரோதமாக இந்த மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.