அதிமுகவில் கோஷ்டி மோதல்; மாஜி அமைச்சர் தங்கமணியின் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களுடன் நடுரோட்டில் ரகளை; அடிதடி: ராசிபுரத்தில் பரபரப்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று அதிமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்காக சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், தனது ஆதரவாளர்கள் 800க்கும் மேற்பட்டோரை சுமார் 10 வாகனங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி ஆத்தூர் மெயின்ரோட்டில் வந்தபோது அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தரப்பினர் வழிமறித்துள்ளனர்.
அப்போது, ‘எதற்காக இவ்வளவு பேரை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து செல்கிறீர்கள்’ என கேட்டு சரவணன் தரப்பினர் தகராறு செய்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சரவணன் தரப்பை சேர்ந்த சீராப்பள்ளி பேரூர் செயலாளர் செந்தில்குமார், மேற்கு அவைத்தலைவர் சண்முகம் ஆகியோர் சந்திரசேகரனின் தரப்பினரிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இரு கோஷ்டியினரும் சாலையிலேயே சட்டையை பிடித்து இழுத்தும், செல்போனை பறித்தும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவலறிந்து ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பையும் விலக்கிவிட்டனர்.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நான் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார். இதனால் அவர்களை போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கவில்லை. மேலும் அவர்கள் வந்த வாகனங்களும். அங்கயேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுபற்றி அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது பல உதவிகளை செய்துள்ளார். இதனால் அவருக்கு நிர்வாகிகள் ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால் அவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாளர்களை அதிகமாக அழைத்து வந்தார். தன்னால் அதிகளவு ஆட்களை அழைத்து வரமுடியாததால் சரவணன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். கட்சிக்கு எதிராக செயல்படும் அவரை மாற்ற வேண்டும்’ என்றனர்.