ஏழாயிரம்பண்ணை அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை அருகே சிப்பிப்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ளது சிப்பிப்பாறை கிராம். இங்கு 2000க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிப்பிப்பாறையில் இருந்து சத்திரம் செல்லும் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கேட்டு கொண்டது.
இதையடுத்து, ஒரு சிலர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிப்பிப்பாறையில் இருந்து சத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர் அபிநயா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி ஏழாயிரம்பண்ணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.