ஆசைக்கு இணங்க வற்புறுத்தி பணம் பறிப்பு; உல்லாச வீடியோ, படங்களை காட்டி காதலன் மிரட்டலால் காதலி தற்கொலை: நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்று இன்ஸ்டாவில் வெளியிட்டதால் விபரீத முடிவு
நெல்லை: இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உல்லாச வீடியோவை காட்டி மிரட்டிய நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ பரவியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 3 பேரையும் ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கணவர் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துலட்சுமி அதே பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தன் கைப்பட எழுதிய 8 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
இதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமிக்கும், பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆலங்குளத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்த சக்திவேல் (32) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலானது. சக்திவேலும், முத்துலட்சுமியும் சிலமுறை தனிமையில் இருந்துள்ளனர். இவ்வாறு தனிமையில் இருந்ததை சக்திவேல், இளம்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் முத்துலட்சுமியின் பழக்கத்தை அறிந்த உறவினர்கள், அவரை கண்டித்த நிலையில், அவர் சக்திவேலிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் உல்லாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து முத்துலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டி ரூ.4 லட்சம் வரை கறந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் மேலும் ஒரு லட்சம் பணம் கேட்டு முத்துலெட்சுமியை மிரட்டி வந்தாராம். அதற்கு மேல் பணம் தர முடியாத முத்துலட்சுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை போலீசார் அழித்து விட்டனர்.
தன்னை போலீசில் மாட்டி விட்டதால், ஆத்திரமடைந்த சக்திவேல், அவரது மனைவியின் செல்போனில் மறைத்து வைத்திருந்த இளம்பெண்ணின் படங்கள், உல்லாச வீடியோவை ஒர்க்ஷாப்பிற்கு அடிக்கடி வரும் மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜ் (36) என்பவருக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (42) என்பவரும் சேர்ந்து கொண்டு, முத்துலட்சுமியை தங்கள் ஆசைக்கும் இணங்குமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன முத்துலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர் தற்கொலைக்கு காரணமான சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி செல்போனிலிருந்து வீடியோ வெளியானதால் வீடியோவை பரப்பியதாக அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.