28 மாவட்டங்களில் ஊராட்சி தனி அலுவலர்களின் பதவி காலம் நீட்டிப்பு
சென்னை: 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் தனி அலுவலர்களின் பதவி காலத்தை 2026 ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி அறிமுகம் செய்தார். ‘‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை தவிர்த்து 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 5ஆம் தேதியோடு முடிவடைந்தது.
ஊராட்சிகளில் மறு சீரமைப்பு, சிற்றொகுதிகளில் எல்லை மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு செயல்முறைகள் இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் 2025 ஜனவரிக்கு முன்பாக தேர்தல் நடத்த இயலவில்லை. எனவே, தேர்தல் நடைபெறும் வரை இந்த ஊராட்சிகளின் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், 28 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2026 ஜனவரி் 5 வரை நீட்டிப்பு செய்தவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட திருத்தம் செய்யக்கூடிய வகையில் அதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் இ. பெரியசாமி பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார்.