கொரோனா காலத்தில் ரூ.20 லட்சம் கோடி வழங்கியது போல் ஏற்றுமதி துறையை மீட்க சிறப்பு நிவாரண திட்டம்?.. ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை
டெல்லி: அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரியால் சரிவை சந்தித்துள்ள ஏற்றுமதித் துறையை மீட்க ஒன்றிய அரசு சிறப்பு நிவாரணத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை ஒன்றிய அரசு குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிவாரணத் தொகுப்பைத் தயாரிக்கும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரியால், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற துறைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் பெரும் பங்கு வகிக்கும் இந்தத் துறைகள், தற்போது நெருக்கடியில் உள்ளன. இது தவிர, தோல் மற்றும் காலணிப் பொருட்கள், ரசாயனங்கள், பொறியியல் உற்பத்திப் பொருட்கள், விவசாயம் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த வரி உயர்வால், அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மை குறைந்து, வரும் மாதங்களில் வர்த்தக ஒப்பந்தங்கள் குறையக்கூடும் என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிவாரணத் திட்டம், சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் நிதிப் புழக்க சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து பணம் வந்து சேர்வதில் ஏற்படும் தாமதத்தால், பல நிறுவனங்கள் தங்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தேவையான மூலதனத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. எனவே, ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழிலைத் தடையின்றித் தொடர, வங்கிகள் மூலம் கடன் எளிதாகக் கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு, குறிப்பாகச் சிறு நகரங்களில் வேலைவாய்ப்பை வழங்கும் இந்தத் துறைகளில், ஆட்குறைப்பு ஏற்படுவதைத் தடுப்பதிலும் ஒன்றிய அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டத்தின் அடிப்படையில், இந்த புதிய நிவாரண திட்டம் உருவாக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒன்றிய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியப் பொருட்களின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பது, புதிய சந்தைகளைக் கண்டறிவது மற்றும் பாரம்பரிய வர்த்தக நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரணத் தொகுப்பும், ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டமும் இணைந்து வர்த்தகச் சூழல் கடினமாக இருக்கும் இந்த நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.