ராமதாஸ் நடத்திய செயற்குழு சட்டத்திற்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானம்
பாமக அரசியல் தலைமைக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாட்டின் பொதுவான அரசியல் சூழ்நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஜூலை 25ம் தேதி முதல் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
* அதன் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணியின் செயல்பாடுகளுக்கு துணை நிற்கவும், அவரது கரங்களை வலுப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது. கட்சியின் நிறுவனரான ராமதாஸை பாமக எப்போதும் கொண்டாடுகிறது; போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் பணியாகும்.
பாமக செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அன்புமணிக்கு மட்டுமே உண்டு. பாமகவின் அமைப்பு சட்ட விதி 15ன் படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதை இக்கூட்டம் நினைவு கூர்கிறது. பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணியால் அழைக்கப்பட்டு, கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானவை ஆகும்.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அன்புமணியின் தலைமை மீது இந்தக் கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது. பாமகவை ெதாடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும், அன்புமணியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம். பாமகவின் 37ம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.