அசாம் பழங்குடியினருக்கு விதிவிலக்கு: 2 குழந்தைகள் கொள்கையில் தளர்வு
திஸ்பூர்: அசாமில் பழங்குடியினர் உள்ளிட்ட குறிப்பிட்ட சமூகங்களுக்கு இரண்டு குழந்தைகள் கொள்கையில் இருந்து விலக்கு அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அசாமில் கடந்த 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருப்பவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது என்ற விதிமுறை அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தக் கொள்கையில் தற்போது முக்கிய தளர்வு ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பழங்குடியினர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மோரன், மொட்டாக் ஆகிய பூர்வகுடி சமூகங்களுக்கு இரண்டு குழந்தைகள் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் அரசு வேலை மற்றும் தேர்தல் ஆகியவற்றில் எவ்வித தடையுமின்றி பங்கேற்கலாம். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், ‘பழங்குடியினர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மோரன் மற்றும் மொட்டாக் சமூகத்தினரைப் பொறுத்தவரை, இரண்டு குழந்தைகள் என்ற விதிமுறையை தளர்த்துகிறோம். ஏனெனில், அவர்கள் மிகச் சிறிய சமூகங்கள். அவர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால், அடுத்த 50 ஆண்டுகளில் அந்த சமூகங்களே இல்லாமல் போகக்கூடும். மேலும், 1983ம் ஆண்டு நெல்லி படுகொலை சம்பவம் தொடர்பான திவாரி ஆணையத்தின் அறிக்கை, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொதுமக்களின் பார்வைக்காக அவையில் தாக்கல் செய்யப்படும்’ என்றும் அவர் அறிவித்தார்.