நிறைய புதுமைகளை புகுத்த வேண்டும்! : ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறையில் அசத்திவரும் விஷ்ணுபிரியா!
இன்றைய நவீன உலகில் எல்லா துறைகளிலும் பெண்கள் தங்கள் சிறப்பானதொரு இருப்பினை பலருக்கும் உணர்த்தி பல் துறைகளிலும் வெற்றி கண்டுகொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் தொகுப்பாளராக வாழ்வினை துவங்கி தொழில்முனைவோராக உருமாறி தற்போது நிறைய கிரியேட்டிவிட்டியும், நவீன மயமான புதுப்பிக்கத்தக்க உத்திகளும் தேவைப்படும் ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறைகளில் களம் கண்டு தனது வெற்றிக் கொடியினை நாட்டி அசத்தி வருகிறார் சென்னை சூளைமேடு பகுதியினை சேர்ந்த விஷ்ணுபிரியா. ஒவ்வொரு முறையும் புதுப்புது கருப்பொருளை உருவாக்கி, புதிய நவீன உத்திகளை புகுத்தி வித்தியாசமான நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வரும் விஷ்ணுபிரியா தனது ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறை மற்றும் விழா தயாரிப்புகள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
உங்களை பற்றி..
நான் எம்பிஏ படித்திருக்கிறேன். நான் கல்லூரி காலத்திலேயே தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக எனது பணியினை திறம்பட செய்து வந்தேன். எம்பிஏ முடித்த பிறகு கார்பரேட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். முதலில் அந்த கம்பெனியில் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பும் தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை திறம்பட செய்த எனக்கு, நாமே சொந்தமாக இத்தொழிலில் இறங்கினால் என்ன என்கிற எண்ணங்கள் தோன்றியது. நான் மீடியா துறையை தேர்வு செய்தது எனது சுய ஆர்வம் காரணமாகவே, அதிலிருந்து கிடைத்த நட்புகள் மற்றும் தொழில் தொடர்புகள் முலமாகத்தான் எனது அடுத்த கட்ட முயற்சியாக சொந்தமாக ஈவண்ட் மேனேஜ்மென்ட் தொழிலில் இறங்கினேன். மீடியா மற்றும் திரைத்துறை சார்ந்த நண்பர்கள் தொடர்பு என்னை வெற்றிகரமான ஈவண்ட் மேனேஜராக மாற்றியது எனலாம். எனது அரோரா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி தீராத ஆர்வத்திற்கும், எனது கடும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்பது கூட பொருத்தமாக இருக்கும். தொகுப்பாளராக எனக்கு இருந்த பணி அனுபவங்கள் ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறையில் சிறப்பாக வழிநடத்தி செல்ல பெரிதும் உதவியாக இருந்தது. இன்றுவரை பல்வேறு பிரபலங்களின் நட்பும் , அதனால் நிறைய தொழில் வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் கிடைத்து வருவது எனது தொழில் திறமைக்கு கிடைத்த சான்று என்பதே உண்மை. இந்த தொழிலில் எனக்கு பதினாறு வருட அனுபவங்கள் இருக்கிறது. அந்த அனுபவத்தில் நிறைய நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்று பல விவிஐபிகளின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள்?
பர்த்டே பார்ட்டிகள், நியூ இயர் செலிப்பரேஷன்,சங்கீத் பார்ட்டிகள், ப்ரைவேட் பார்ட்டிகள் என பல்வேறு தளங்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி தருகிறோம். அதில் பல விஐபிகளும் விருந்தினர்களாக கலந்து கொள்வதால் விழா மிக சிறப்பாக பிரம்மாண்டமாக அமையும். பல அரசியல் துறை பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கும் அவர்களது தனிப்பட்ட விழாக்களையும், பார்ட்டி களையும் வெற்றிகரமாக அவர்கள் விரும்பும் வகையில் நடத்தி கொடுத்த பல்வேறு அனுபவங்கள் இருக்கிறது. தற்போது பல்வேறு திறமையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை இனங்கண்டு அவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கும் வகையில் பொதுவான பெரிய அளவிலான போட்டிகளையும் நடத்தி சிறப்பான பரிசுகளை அளித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறோம்.
உங்களது சிறப்பான நிகழ்ச்சிகளைப் பற்றி...
பெண்கள் தங்களுக்கு உள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல்வேறு துறைகளில் சாதித்துக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர் தினத்திற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘‘பொன் மகள்” நிகழ்ச்சிகளை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கௌரவித்தோம். அதன் பிறகு பலரின் சாதனைகளுக்கு காரணமாக இருக்கும் குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக குரு மற்றும் சிஷ்யன் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு நடத்த வேண்டும் என்கிற எண்ணங்கள் காரணமாக ‘‘குருசிஷ்யா” நிகழ்ச்சியை நடத்தி சாதனைக்கு காரணமாக மாணவனையும் கலைகளை கற்பித்த ஆசிரியரையும் கௌரவித்தோம். நகைச்சுவை என்பது இக்காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இன்றைய பரபரப்பான பாஸ்ட்புட் உலகில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் ஆசுவாஸமாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில் நகைச்சுவையாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி கௌரவித்தோம்.
சமீபத்திய நிகழ்ச்சிகள் குறித்து...
நிறைய பெண்திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்கிற ஆசைகள் நெடுநாட்களாக இருந்தது. திறமையை ஊக்குவிக்க வேண்டும் அதே சமயம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்து இந்த ‘‘அம்மன் மேக்கப்” நிகழ்ச்சிகளை அரோரா மூலமாக நடத்தினோம். இதில் பிரியங்கா ரோபோ சங்கர், அஷ்மிதா, சிவகவிதா, ராதிகா மாஸ்டர் போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்டது எங்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு நிறைய பேர் கலந்து கொண்டு சிறப்பித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் பெரிய அளவிலான பரிசுத் தொகையினை பரிசாக அளித்தோம். இதில் பலருமே எங்களது விவிஐபி நடுவர்களை அசத்தி பரிசுகளை தட்டி சென்றனர். தற்போது ஏலகிரியில் தாண்டியா ஆட்டம் நடத்தி உள்ளோம். அதே போன்று சந்திரமுகி ரீ கிரியேடிவ் போட்டி வைத்திருந்தோம். அதிலும் நிறைய பெண் போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்துகொண்டு மிக சிறப்பாக பங்கேற்று அசத்தி இருந்தனர். இன்னும் நிறைய எதிர்கால ப்ரொக்ஜெக்ட் தயாரித்து வைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்கிற ஆசைகளும் கனவுகளும் இருக்கிறது. எனக்கு சிறுவயதிலிருந்தே சிறந்த பெண் தொழில் முனைவோராக ஆகவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்த குறிக்கோளினை நடைமுறைப்படுத்த திட்டங்களை சிறப்பாக தீட்டியதோடு, நிறைய உழைப்பினையும், செலுத்த வேண்டி இருந்தது. எனது தொடர்ந்த தயாரிப்புகளோடு நவீன யுக்திகளை முயற்சித்து செய்கின்ற போது அதற்கான நல்லதொரு வரவேற்பும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இத்துறைக்கு தேவையான பண்புகள் குறித்து...
ஈவண்ட் மேனேஜ்மென்ட் தொழிலை பொறுத்தவரை கிடைக்கும் வியாபார தொடர்புகளை தக்கவைத்தல், அனைவரிடம் நட்பு பாராட்டுதல், புதிய தொடர்புகளை விரிவு படுத்துதல், சிறப்பானதொரு பேச்சுத்திறமை, மேடையில் தொகுத்து வழங்கும் திறன், எந்த சூழலிலும் நிகழ்ச்சிகளை திறன்பட நடத்தி செல்லும் சமயோசித உத்திகள், எந்த இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் திறன், நமக்காக வரும் விஐபிகள் மற்றும் பிரபலங்களின் மனம் கோணாமல் சிறப்பாக நடத்தி கௌரவித்து அனுப்பும் பாங்கு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இந்த தொழிலில் நல்ல எதிர்காலம் இருக்கும்.
இத்தொழிலில் உள்ள சவால்கள் என்ன?
எல்லா தொழில்களிலும் சவால்கள் இருக்கின்றதுதான். ஆனால் பொது வெளியில் நிறைய பிரபலங்களோடு பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி செல்வது என்பது கடுமையான சவாலாகத்தான் இருக்கும். எந்த ஒரு நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட காலக்கெடு வில் முடிப்பது ரொம்ப பெரிய சவால். நேரமேலாண்மை மிக முக்கியம். கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கும் , மக்களும் போரடிக்காத வகையில் நிகழ்ச்சிகளை கொண்டு செல்வது ஆகப்பெரிய சவால். திடீரென வரவேண்டிய விருந்தினர்கள் வரவில்லை என்றாலும், அவசர நெருக்கடி காரணமாக தாமதமாக வந்தாலும் இருப்பவர்களை வைத்து சமாளித்து விழாவினை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிக்க துவங்குவதிலிருந்து லைவ்வாக நடைபெற்று முடியும் நாள்வரை எங்களுக்கு டென்ஷனாகத்தான் நாட்கள் நகரும். ஆனால் விழா சிறப்பாக நடைபெற்று பலரது பாராட்டுக்களையும் கலந்துகொள்ளும் நபர்களின் மகிழ்ச்சியினை காணும்போது எல்லா சவால்களும் சாதனைகளாகவே தெரியும் என்கிறார் விஷ்ணுபிரியா.
- தனுஜா ஜெயராமன்.