மூட்டை முடிச்சுடன் 24 மணிநேரமும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தவர்கள் வெளியேற்றம்: பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு அதிகரிப்பால் சிஎம்டிஏ அதிகாரிகள் அதிரடி
அண்ணா நகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணிநேரமும் தஞ்சமடைந்த கும்பல்களை சிஎம்டிஏ அதிகாரிகள் விரட்டி அடித்தனர். பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு மற்றும் பஸ் நிலைய வளாகம் முழுவதும் அசுத்தம் செய்யப்படுவதால் சிஎம்டிஏ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்ணக்கான பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இரவு-பகல் என எப்போதும் பயணிகள் வரத்து அதிகமாக காணப்படும். குறிப்பாக, வெளியூரில் இருந்து வரும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் ஓய்வெடுத்து விட்டு செல்வது வழக்கம்.
அப்படி இருக்கும் பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் பலரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக, பயணிகள் கூட்டத்தோடு கூட்டமாக தஞ்சமடையும் மர்ம நபர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவியது. 24 மணிநேரமும் பேருந்து நிலையத்தின் உள்ளே தஞ்சமடையும் நபர்களால் வளாகம் முழுவதும் அசுத்தமாக காணப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர அழுக்கு துணி மூட்டைகளை போட்டு வைத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். இவர்கள் பேருந்து நிலையத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் பயணிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பயணிகளிடையே கோரிக்கை எழுந்தது. அதனை ஏற்று சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, ‘பயணிகள் அல்லாமல் அங்கேயே தஞ்சமடைந்து கிடந்த வெளிநபர்களை வெளியேற்றினர். அசுத்தமான பகுதிகளை தண்ணீர் ஊற்றியும், பிளீச்சிங் பவுடர் தூவியும் சுத்தம் செய்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்து இரவு நேரங்களில் செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் பேருந்து நிலையத்தில் பதுங்க முடியாது. எனவே, பயணிகளின் பாதுகாப்பபை உறுதி செய்ய சிஎம்டிஏ அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.