தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்: ஐரோப்பிய பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை: தமது வெளிநாட்டுப் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். ஐரோப்பியப் பயணமும் ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்று முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்; ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை எடுத்துரைத்தேன். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு பாடத்திட்டம் மட்டுமின்றி திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறித்து பேசினேன். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்த விவர தொகுப்பை பார்த்து ஜெர்மனி முதலீட்டாளர்கள் வியந்து பேசினார்கள்.
இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறிதான் வெளிநாடு வந்துள்ளேன் என்று தமிழர்கள் கூறினார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும், வளர்ச்சியையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நான் விரும்பினேன். அதற்கான தொலைநோக்கு திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறோம். எனக்கு அவர்கள் கொடுத்த வரவேற்பிலும் தமிழ்நாடு மீது எந்தளவிற்கு அவர்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. தமிழ்நாட்டில் அதிகளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதை ஜெர்மனி முதலீட்டாளர்கள் பெருமையோடு கூறினார்கள்.
அனைத்து மாவட்டங்களுக்குமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஜெர்மனி முதலீட்டாளர்கள் பாராட்டி பேசினார்கள். ஆக்ஸ்போர்டு 1000 ஆண்டுகளுக்கு பழமையான பல்கலைக்கழகம்; அங்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் முன்பு தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து, ஐயாவை பற்றி பேசியபோது மெய்சிலிர்த்தது என்று சொல்லுவாங்களே அப்படி இருந்தது என்று கூறினார்.