எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ உரிமையாளர் கருகி பலி
எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் கருகி பலியானார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (57). திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரான இவர்சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் 5க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், எட்டயபுரம் அருகே கருப்பூரில் உறவினர் கண்ணபிரான் நடத்தி வரும் பட்டாசு ஆலையை கந்தசாமி குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அக்டோபர் 20ம்தேதி தீபாவளி பண்டிகைக்காக கருப்பூர் ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு கந்தசாமி நேற்று தனது அறையில் இருந்துள்ளார். மாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் தப்பி ஓடினர். கந்தசாமி வெளியே ஓடி வந்தபோது ஆலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி விழுந்ததில் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 4க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. மேலும் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் பட்டாசு ஆலை கட்டிடங்களும் சேதமடைந்தன. ஆலையின் அருகே இருந்த கோழிப்பண்ணை செட் முற்றிலும் கருகி சேதமடைந்தது. அங்கு நிறுத்தியிருந்த ஒரு கார், 2 ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.