எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!!
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரேர்டி மரியம் தேவாலயம் அமைந்துள்ளது. கட்டுமானம் நடைபெற்று வரும் இந்த தேவாலத்தில் நேற்று முன்தினம் அதிகாலை வழிபாட்டிற்காக மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். இந்நாட்டில் பாதுகாப்பு விதிமுறைகள் குறைவாக உள்ளதால் அடிக்கடி கட்டுமான விபத்துக்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.