போதைப் பொருள் வழக்கில் கைதான கணவரை ஸ்டேஷனில் இருந்து தப்ப வைத்த மனைவி: கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் இருந்து மனைவி தப்ப வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜு மன்சூர். நேற்று அவரை போலீசார் ஒரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து அஜு மன்சூரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறை ஜன்னல் வழியாக ஏறி அங்கிருந்து தப்பினார்.
இந்த சமயத்தில் வெளியே ஸ்கூட்டரில் அவரது மனைவி பின்ஷி காத்திருந்தார். போலீஸ் நிலையத்தின் பின்புறம் வழியாக வந்த அஜு மன்சூர் மனைவியின் ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த விவரம் எதுவுமே போலீசாருக்கு தெரியாது. சிறிது நேரம் கழித்துத் தான் கழிப்பறைக்கு சென்ற அஜு மன்சூர் திரும்பி வரவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சென்று பார்த்தபோது கழிப்பறை காலியாக இருந்தது. அப்போதுதான் அஜு மன்சூர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் என்ற விவரம் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து அஜு மன்சூரையும், அவர் தப்பிக்க உதவிய மனைவி பின்ஷியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.