எஸ்கலேட்டர், டெலிப்ராம்ப்டர் திடீர் முடக்கம்; ஐ.நா.வில் அதிபர் டிரம்புக்கு எதிராக சதி?: விசாரணை நடத்த வெள்ளை மாளிகை கோரிக்கை
நியூயார்க்: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டு செய்யப்பட்டதா என விசாரிக்க வெள்ளை மாளிகை கோரியுள்ளத. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றபோது, அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு தொழில்நுட்பக் கோளாறுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது. முன்னதாக ஐ.நா. தலைமையகத்தில் அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் எஸ்கலேட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, அது திடீரென பாதியில் நின்றது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறுகையில், ‘ஐ.நா.வில் யாரேனும் வேண்டுமென்றே எஸ்கலேட்டரை நிறுத்தியிருந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால், அமெரிக்கக் குழுவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் பாதுகாப்பு அம்சத்தை தூண்டியதால் எஸ்கலேட்டர் நின்றதாக ஐ.நா. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவரது டெலிப்ராம்ப்டர் (மேடையில் பார்த்து படிப்பதற்கான தொழில்நுட்பம்) திடீரென செயலிழந்தது. இதனால் சிறிது நேரம் அவர் தன் உரையை குறிப்புகள் இல்லாமல் தொடர்ந்தார்.
இதுகுறித்தும் கருத்து தெரிவித்த டிரம்ப், ‘இன்று ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து எனக்குக் கிடைத்தது ஒரு எஸ்கலேட்டரும், டெலிப்ராம்ப்டரும்தான்’ என்று குறிப்பிட்டார். தனது உரையின்போது டிரம்ப், ‘ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம் தான் என்ன? அவர்கள் செய்வது எல்லாம், கடுமையாக எழுதப்பட்ட கடிதத்தை அனுப்புவது மட்டுமே. வெற்று வார்த்தைகளால் போரை ஒருபோதும் தீர்க்க முடியாது. காலநிலை மாற்றம் குறித்த கவலைகள், உலகில் அரங்கேற்றப்பட்ட மிகப்பெரிய மோசடி. ஐ.நா. சபை, சட்டவிரோத குடியேற்றத்தின் மூலம் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்துகிறது. திறந்த எல்லைகள் என்ற தோல்வியுற்ற பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் எல்லாம் நரகத்திற்கு தான் செல்வீர்கள். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தத் தவறிய ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் இந்தியாவை கண்டிக்கிறேன்’ என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
உலகக்கோப்பை, ஒலிம்பிக்கிற்கு வாங்க!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘2026ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி மற்றும் 2028ம் ஆண்டில் நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளைக் காண ரசிகர்கள் வரவேண்டும். 2026ம் ஆண்டு அமெரிக்கா தனது 250வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது’ என்றார். அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விசா ஒருமைப்பாட்டுக் கட்டணம், ஏற்கனவே உள்ள சுற்றுலா விசா கட்டணத்துடன் சேர்த்து மொத்த கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும், விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு காலம் 169 நாட்களாக உள்ள நிலையில், இந்தியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் இது 400 நாட்களுக்கும் அதிகமாக உள்ளது. இதுதவிர, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையான தடையும், 7 நாடுகளுக்கு பகுதி தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், ரசிகர்களுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. இதனால், உலகளாவிய போட்டிகளின் நோக்கமே கேள்விக்குறியாகி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டிரம்பை கொல்ல முயன்றவர் பேனாவால் குத்தி தற்கொலை முயற்சி;
அமெரிக்க அதிபர் டிரம்பை, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரியான் ரூத் என்பவர், ராணுவ பயன்பாட்டில் உள்ள துப்பாக்கியுடன் புதரில் மறைந்திருந்தபோது ரகசிய சேவை அதிகாரியால் கண்டறியப்பட்டார். இதையடுத்து அவர் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ரியான் ரூத் தனக்காக தானே வாதாடினார். அரசு தரப்பில் 38 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, தடயவியல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குறிப்பாக, ரியான் ரூத் எழுதிய கடிதம் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது. அதில், ‘இது டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி, ஆனால் நான் தோற்றுவிட்டேன்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சுமார் இரண்டரை மணி நேர விசாரணைக்கு பிறகு, ரியான் ரூத் மீதான 5 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டதும் ரியான் ரூத், நீதிமன்றத்திலேயே பேனாவால் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், தண்டனை விவரம் வரும் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.