ஈரோட்டில் கொட்டி தீர்த்த மழை: ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 15 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஈரோடு நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஈரோடு நகரில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீரென வானம் இருண்டு பலத்த மழை கொட்ட தொடங்கியது. காற்று மற்றும் இடியுடன் கூடிய இந்த மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. மழையால் ஈரோடு நகரச் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கொல்லம்பாளையம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்தவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. ரயில் நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் சிரமத்துடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறினர். மேலும் புக்கிங் அலுவலகத்திலும் மழை நீர் புகுந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 6 செ.மீ மழை பதிவாகி இருந்தது.