ஈரோடு, திருப்பூரில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோடு: ஈரோடு, திருப்பூரில் பரவலாகமழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஈரோடு நகரில் நேற்று காலை முதலே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து, மதியம் 1.30 மணியளவில் லேசான காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறியது. இதனால் இரவு முழுவதும் குளிர்ச்சியான கால நிலை நிலவியது. தொடர்ந்து இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை ஈரோடு நகரில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து வானம் இருள் சூழ்ந்த காணப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்கு பின்னர், மீண்டும் காலை 8.30 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கிய மழை சீராக பெய்து கொண்டே இருந்தது.
மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில் மழையில் நனைந்தவாறு மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: ஈரோடு-42, மொடக்குறிச்சி 87, கொடுமுடி 59.20, பெருந்துறை 42, சென்னிமலை-18.40, பவானி 13, கவுந்தப்பாடி-7.20, கோபி 11.20, எலந்தக்குட்டை மேடு 21.40, கொடிவேரி அணை 12, குண்டேரிபள்ளம் அணை 7.40, நம்பியூர்-17, சத்தியமங்கலம் 18, பவானிசாகர் அணை 5.20, தாளவாடி-20 என மொத்தம் 381 மி.மீ மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 87 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு: திருப்பூர் வடக்கு பகுதி 26, குமார் நகர் 30, பல்லடம் சாலை 27, அவிநாசி தாலுகா 13, ஊத்துக்குளி தாலுகா 19, பல்லடம் 14, தாராபுரம் 16, மூலனூர் 24, காங்கயம் தாலுகா 28, வெள்ளகோவில் 31, உடுமலை 22, அமராவதி அணை பகுதி 42, மடத்துக்குளம் 16 என மாவட்டம் முழுவதும் 470.40 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 23.52 மி.மீ, மழை பெய்து உள்ளது. மேலும் இன்றும் மாவட்டத்தில் லேசான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.