ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.5ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தி.மு.க, நாதக உள்பட மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரி, அனைத்து நிறுவனங்களுக்கும் வரும் பிப்.5ம் தேதி உள்ளூர் விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.