ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே பயங்கரம் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை
*மது போதையில் வெறிச்செயல்:3 பேரிடம் தீவிர விசாரணை
ஈரோடு : ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மது போதையில் குடியாத்தம் வாலிபரை சாக்கடையில் தள்ளி விட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் முன்புறம் சத்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை அருகே உள்ள சாக்கடையில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயத்துடன் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், இறந்த நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (40) என்பதும், அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில், நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அங்கிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு ஓடிச் செல்வதும், வருவதுமாக இருந்தது பதிவாகியிருந்தது.
கொலை சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சுகீர்த்தன் (21), முகேஷ் (22),செல்வராஜ் ஆகிய 3 பேரை ஈரோடு டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மது போதையில் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.