“ஒன்றிய அரசின் இந்த முடிவால் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு ஆளாகும்” - தமிமுன் அன்சாரி
சென்னை: ஒன்றிய அரசின் இந்த முடிவால் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு ஆளாகும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கனிம வளங்களை கண்டறிவதற்கும், அது தொடர்பாக சுரங்கங்களை தோண்டுவதற்கும் இனி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் போவதில்லை என ஒன்றிய பாஜக கூட்டணி அரசு முடிவு எடுத்திருப்பது அவர்களின் சுரண்டல் அரசியலை வெளிப்படுத்துகிறது.
இயற்கை வளங்களை வரம்பற்று கொள்ளையிடவும், இதற்காக உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தரகு வேலை செய்யவும் ஒன்றிய அரசு முடிவு எடுத்திருப்பது வெட்கக்கேடானது. இதனால் மலைவாழ் மக்களும், விவசாயிகளும் மட்டுமல்ல... சுற்றுச்சூழலும் பேரழிவுக்கு ஆளாகும். மலையக கார்ப்பரேட் திருடர்களுக்கு துணைப் போகும் இம்முடிவை, ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.