டிசம்பர் 1ம் தேதி முதல் அனுமதி; செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம்: பெரியவர்களுக்கு ரூ.15; சிறியவர்களுக்கு ரூ.5
கோவை: டிசம்பர் 1ம் தேதி முதல் செம்மொழி பூங்காவிற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த செம்மொழி பூங்கா தனித்துவ அம்சங்களுடன், உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர், லண்டன் சென்று கியூ பூங்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்கா, ஷாங்காய் பூங்காக்களை பார்வையிட்டனர். அங்குள்ள செடி, கொடிகள், தாவரங்கள் மற்றும் அவற்றை பராமரிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், வெற்றிகள் மற்றும் தோல்விகளை ஆராய்ந்தனர். இதைத்தொடர்ந்து, செம்மொழி பூங்காவில் செயல்படுத்தி உள்ளனர்.
23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டு, அதில் 2 ஆயிரம் வகையான தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல சங்க காலத்தில் இடம் பெற்றிருந்த அரிய வகை மர வகைகள், மேற்குத்தொடர்ச்சி மலை வாழ் அரியவகை தாவரங்கள் இப்பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. செடி, கொடிகள், தாவரங்கள், அரிய வகை மரங்களை ரசித்து செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் பசுமையுடன் காணப்படும் நறுமணமிக்க மரமான தென் அமெரிக்காவில் பெரு, சிலி, பிரேசிலில் காணப்படும் மிளகு மரம் இடம் பெற்றுள்ளது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிற செந்தூரம் மரமும், மிகவும் அரிய வகையான கருப்பு அத்தி போன்சாய் மரமும் நடப்பட்டுள்ளது. முழங்கால் அளவுக்கு செடிகள் வளர்க்கப்பட்டு, சிறுவர், சிறுமியர் ‘மேஸ்’ விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடையேழு வள்ளல்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மழை நீரை சேமிக்க 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான நவீன வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றிப்பார்க்கும் வகையில், பேட்டரி வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமை (டிசம்பர் 1ம் தேதி) முதல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 15, சிறியவர்களுக்கு ரூ.5, வீடியோ கேமிரா அனுமதிக்க ரூ.50, நடைப்பயிற்சி மேற்கொள்ள மாதக்கட்டணம் ரூ.100, ஆண்டு கட்டணம் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரமும், குறும்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் வரும் 28ம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.