தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு: ஒன்றிய கல்வித்துறையின் 9 பேர் குழு பரிந்துரை
டெல்லி: தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்தவும் ஒன்றிய குழு பரிந்துரைத்துள்ளது. உயர்கல்விக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்காக பயிற்சி பயன்களை மாணவர்கள் நாடுவதை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய மத்திய கல்வித்துறை சார்பில் 9 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில் தனியார் பயிற்சி மையங்களின் விளம்பரங்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை தவறாக வழிநடத்துவதால் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 11ம் வகுப்புக்கான படத்திட்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளி தான் மாணவர்களுக்கு மன அழுத்தம் தருவதாகவும், நுழைவுத் தேர்வுக்கு ஆயத்தமாவதை தவிர்க்க செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்திற்கும், நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் உள்ள இடைவெளியே பயிற்சி மையங்கள் தங்கள் சுரண்டலுக்கு பயன்படுத்துவதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. OMR எனப்படும் குறியீட்டு பதில் அளிக்கும் முறையான கேள்வி தாள்களை பள்ளி தேர்வுகளில் வழங்குவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் நுழைவுத் தேர்வு எழுதுவதில் தயக்கம் அல்லது வேறுபான்மையை தவிர்க்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் கால இடைவெளியை குறைப்பதுடன், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.