எண்ணூர் கடலில் குளித்தபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி 4 இளம்பெண்கள் பலி: போலீசார் விசாரணை
சென்னை: எண்ணூர் கடலில் குளித்த கல்லூரி மாணவி உள்பட 4 இளம்பெண்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஷாலினி (18), அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அருகில் உள்ள பெத்திக்குப்பம் அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் தேவகி (30), தேர்வழி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (18), தேவம்பேடு, நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பவானி (19). இவர்கள் மூவரும் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் நேற்று மாலை, கும்மிடிப்பூண்டியில் இருந்து மின்சார ரயில் மூலம் எண்ணூருக்கு வந்துள்ளனர். பின்னர் பெரியகுப்பம் கடற்கரைக்கு வந்து அங்கு போடப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாறாங்கற்களின் அருகே கடலில் குளித்து விளையாடி உள்ளனர். அப்போது, திடீரென ராட்சத அலையில் சிக்கி, 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். 4 பேரின் உடல்களும் சிறிது நேரத்தில் அலையில் மிதந்து கரை ஒதுங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடல்களை மீட்டனர்.
பின்னர், கரைப்பகுதியில் இருந்த செல்போன்களை எடுத்து, அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, விரைந்து வந்த குடும்பத்தினர், 4 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி, எண்ணூர் உதவி கமிஷனர் வீரக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, 4 இளம்பெண்களும் குளித்த இடம் பொதுமக்கள் நடமாட்டம் குறைவான பகுதி, பெரும்பாலும் இந்த கடற்கரைப் பகுதியில் யாரும் குளிப்பதற்கு அதிகமாக வருவதில்லை. இதனால் உயிரிழந்த 4 பெண்களும் கடலில் குளிக்க இந்த இடத்தை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் சக தோழிகள் யாராவது வந்தார்களா, இவர்கள் எப்போது வந்தார்கள், கடலில் குளிப்பதை யாராவது பார்த்தார்களா என பல்வேறு கோணங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் விசாரணை செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ்அறிவித்தார் முதல்வர்: எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
* பெற்றோரை இழந்த குழந்தைகள் தவிப்பு
கடலில் மூழ்கி உயிரிழந்த தேவகி என்பவரது கணவர் செல்வம் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனால், இவரது 2 குழந்தைகளையும் தேவகி காப்பாற்றி வந்த நிலையில் தற்போது அவரும் உயிரிழந்து விட்டதால் 2 குழந்தைகள் ஆதரவின்ற தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.