எண்ணூர் அனல்மின்நிலைய கட்டுமானப்பணியின்போது விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் விமானத்தில் அசாம் அனுப்பி வைப்பு: சம்பவ இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு
பொன்னேரி: மீஞ்சூர் அருகே எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியின்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் இன்று காலை அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இவ்விபத்தில் இறந்த 9 பேரின் உடல்கள் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து சரக்கு விமானம் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீஞ்சூர் அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் மிக உய்ய அனல்மின் திட்டத்தின்கீழ், தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் மூலம் 1320 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நிலக்கரி கையாளும் கிடங்கு பிரிவில் சுமார் 150 அடி உயர பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற பணியில், இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்ததில் 9 வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் ரூ.10 லட்சம், பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் ஆகிய 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் 3 உதவி இயக்குநர்கள் தலைமையில் தடய அறிவியல் குழுவினர் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இன்று காலை அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின்போது, விபத்துக்கான காரணம் குறித்தும், கட்டுமான தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். இதுகுறித்து நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், எதிர்பாராத விபத்தில் 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண உதவி அறிவித்துள்ளார். விபத்தில் பலியான 9 வடமாநில தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று காலை விமானம் மூலம் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் விசாரித்து வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், பொன்னேரி சப்-கலெக்டர் ரவிக்குமார், தாசில்தார் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் உயிரிழந்த 9 வடமாநிலத் தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் என்ஃபார்ம் செய்து பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டன. பின்னர் 9 உடல்களும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன கார்கோ பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு 9 உடல்களும் விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இன்று காலை 8.40 மணியளவில் சென்னையில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி செல்லும் இன்டிகோ ஏர்லைன்சின் தனி விமானம் மூலமாக பதப்படுத்தப்பட்ட 9 உடல்களும் பாதுகாப்புடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்டுமான நிறுவன பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.